பயனற்ற ஜெபத்திற்கான காரணங்கள் (பகுதி -1)

நாம் அனைவரும் ஜெபிக்கிறோம், தேவனிடத்திலிருந்து நம்முடைய ஜெபங்களுக்கு பதில்களையும் எதிர்பார்க்கிறோம். ஆனால் பல முறை நம்முடைய ஜெபங்களுக்கு பதில் கிடைக்காதபோது, நாம் நம்பிக்கை இழந்தவர்களாய் காணப்படுகிகிறோம். பின்னர் நம்மில் பலர் நம் ஜெப வாழ்க்கையில் மந்தமானவர்களாக மாறுகிறோம். ஆகவே, பரிசுத்த ஆவியின் உதவியுடன் பரிசுத்த வேதாகமத்தை ஒன்றாக ஆராய்ந்து, நம்முடைய ஜெபங்களை பயனற்றதாக மாற்றும் விஷயங்களைப் பார்ப்போம்.

1. பாவம் நம்முடைய ஜெபங்களை பயனற்றதாக மாற்றுகிறது.

தாவீது பத்சேபாவுடன் விபச்சாரத்தில் விழுந்தான். துரோகத்தால் அவளது கணவனை போர்க்களத்தில் கொல்லும்படி செய்தான் (2 சாமுவேல் 11, 12). இந்த சம்பவம் தேவனுடன் உண்டான அவனது உறவை முறித்துப்போட்டது. நாம் பாவம் செய்யும்போது, நமக்கும் தேவனுக்கும் இடையில் ஒரு இடைவெளி உருவாகிறது. தேவனுடனான நமது கூட்டுறவு உடைந்து போய்விடுகிறது. பத்சேபாவுடன் தாவீது செய்த பாவத்தின் விவரத்தை நாம் படிக்கும்போது, கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக தேவனுடனான அவனது உறவு முறிந்து போய் இருந்ததாக காணலாம். நம்முடைய அக்கிரமங்கள் நம் தேவனிடமிருந்து நம்மைப் பிரிக்கின்றன. நம்முடைய பாவங்களின் காரணமாக அவர் தம் முகத்தை நம்மிடமிருந்து மறைக்கிறார்.  நம்முடைய பாவங்கள் நமக்கும் நம்முடைய தேவனுக்கும் இடையில் ஒரு சுவர் போல நிற்கின்றன (ஏசாயா 59: 1, 2). நம்முடைய பாவங்களின் காரணமாக தேவன் தம் முகத்தை நம்மிடமிருந்து மறைத்து வைத்திருப்பதால், நம்மில் பலர் இப்போது ஜெபிப்பதை நிறுத்திவிட்டோம் (ஏசாயா 64: 7). நம்முடைய இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தோமானால் தேவன் நம்முடைய ஜெபங்களுக்கு செவிசாய்க்க மாட்டார் என்று சங்கீதக்காரன் கூறுகிறான் (சங்கீதம் 66:18). எனவே இதில் இருந்து வெளியேறுவதற்கான வழி என்ன?

தாவீது தன் பாவத்தை தேவனிடம் ஒப்புக்கொண்டபோது, தேவன் அவனுடைய பாவத்தை மன்னித்தார் (சங்கீதம் 32: 5). சங்கீதம் 32 & சங்கீதம் 51 என்பது தாவீதின் மனந்திரும்புதலின் சங்கீதமாகும். இதிலிருந்து வெளியேற ஒரே வழி இதுதான். உங்கள் பாவத்தை பூசி மறைக்க முயற்சிக்காதீர்கள், ஆனால் அதை தேவனிடம் ஒப்புக்கொண்டு விட்டுவிடுங்கள். ஆண்டவர் உங்களுக்கு இரக்கம் காட்டுவார் (நீதிமொழிகள் 28:13). நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1 யோவான் 1: 9). நம்முடைய வழக்கறிஞரான இயேசு கிறிஸ்து பிதாவுடன் நமக்காக பரிந்து பேசுவார் (1 யோவான் 2: 1).

மேற்கண்ட வசனங்களின் வெளிச்சத்தில் நம்மை ஆராய்வதற்கான நேரம் இது. உங்கள் இதயத்திற்குள் பாவமான எதையும் செய்வதைப் பற்றி யோசிக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தேவனுக்கு முன்பாக ஒப்புக்கொள்ளாத பாவங்கள் ஏதேனும் உண்டா? நோக்கம், சிந்தனை மற்றும் செயல் ஆகியவற்றில் அவருடைய விருப்பத்திற்கு இணங்காத ஏதாவது உங்கள் வாழ்க்கையில் உண்டா? தாமதிக்க வேண்டாம். இயேசுவிடம் வந்து உங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டு அதை விட்டுவிடுங்கள். அவருடைய இரத்தம் உங்கள் பாவத்தையும் குற்றத்தையும் நீக்கும் (1 யோவான் 1: 7).  தந்தையிடம் திரும்பிய கெட்ட குமாரனைப் போல உங்களை அரவணைக்க அவர் காத்திருக்கிறார் (லூக்கா 15:20).

இந்த விஷயத்தை தீர்க்க இயேசு கிறிஸ்து எப்போதும் தயாராக இருக்கிறார். ஆனால் நீங்கள் தயாரா? இதை விரைவாக தீர்த்து வைக்க உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? உங்கள் ஜெபங்களுக்கு பதிலளிக்கப்படுவதை நீங்கள் உண்மையில் பார்க்க விரும்புகிறீர்களா?

ஏசாயா 1: 18 ல் கர்த்தர் கூறுகிறார்,

 “வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.”

நம்முடைய பாவங்களை ஒப்புக்கொள்வதற்கும் அவைகளை விட்டுவிடுவதற்கும் தேவன் நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக!! நம்முடைய பரலோகத் தகப்பனுடன் இடைவிடாத கூட்டுறவு கொள்ள தேவன் நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக!! கர்த்தர்தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!!

Leave a Reply